Asianet News TamilAsianet News Tamil

தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தை கலந்து தமிழ் கொலை நடத்தப்படுகிறது – சகாயம் ஐ.ஏ.எஸ் ஆதங்கம்…

Tamil language Tamil murder conducted with a mixture of English favor the IAS limitations frustrated
tamil language-tamil-murder-conducted-with-a-mixture-of
Author
First Published Apr 8, 2017, 9:25 AM IST


விருதுநகர்

விருதுநகரில் கல்லூரில் விழாவில் பங்கேற்ற சகாயம் ஐ.ஏ.எஸ், “தமிழகத்தில் தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தை கலந்து பேசி தமிழ் கொலை நடத்தப்படுகிறது” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில், கல்லூரி மாணவிகள் பேரவை சார்பில் சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேசியது:

“மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இலக்கினை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஜெர்மானிய பேரரசின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர், வாழ்க்கையில் தனக்கு பிடிக்காத வார்த்தை “பின் வாங்குவது” என்பதுதான் என குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் பாராளுமன்றத்தில் பேசிய போது, “வெற்றியை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு என்றும், அதற்கான பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை கடந்து வெற்றியை அடைவேன்” என்றும் குறிபிட்டார்.

அதே போன்று மாணவ, மாணவிகள் எவரெஸ்ட் சிகரம் போன்ற உயர்ந்த இலக்கினை அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் இருந்து ஒரு போதும் பின் வாங்க கூடாது.

இன்றைய சூழலில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தான் நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இங்கு படிக்கும் மாணவிகள் தங்கள் ஆசிரியர்களை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் உங்கள் வழிக்காட்டி யார்? என்று கேட்ட போது அவர் நான் ராமேசுவரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயின்ற போது எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் தான் எனக்கு வழிகாட்டி என்று கூறினார். எனவே மாணவ, மாணவிகள் தங்கள் இலக்கினை அடைய ஆசிரியர்களையே வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தை கலந்து தமிழ் கொலை தான் நடத்தப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் பேசும் போது தமிழை கலந்து பேசினால் பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள்.

இந்து பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் பேசியபோது ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, எனது நாட்டில் தாய் மொழியில் பேசாமல் அன்னிய மொழியில் பேசுவதற்காக அவமானப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

மாணவிகள் ஆங்கிலத்தை கண்டு பயப்படவேண்டாம். தமிழில் நன்கு பேச கற்றுக்கொண்டாலே ஆங்கிலம் தானாக வந்து விடும்.

இலக்கு என்பது நமக்காக உள்ளது. லட்சியம் என்பது நாம் பிறந்த இந்த மண்ணுக்காகவும், அதில் வாழும் மக்களுக்காகவும் உள்ளது. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும். முடிந்தவரை ஏழைகளுக்கு உதவ வேண்டும்.

ஐன்ஸ்டின் என்ற அறிவியல் அறிஞர் நான் எனது அறிவியல் அறிவை என்னை உருவாக்கிய இந்த சமூகத்திற்காகவே பயன்படுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். எனவே மாணவர்கள் உங்களை உருவாக்கிய இந்த சமூகத்துக்கு சேவை ஆற்ற வேண்டும்.

நான் மதுரையில் ஒரு பிரச்சினைக்காக சுடுகாட்டில் படுக்க வேண்டியது இருந்தது. அமாவாசை தினத்தில் படுத்து இருந்தேன். என்னிடம் உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேட்டனர். எனக்கு சுடுகாட்டில் பயம் இல்லை. சுதந்திர திருநாட்டில் தான் பயமாக உள்ளது என்று குறிப்பிட்டேன்.

எனவே மாணவர்கள் வருங்காலத்தில் நேர்மையாக, உறுதியுடன் இந்த நாட்டிற்கும், சமூகத்துக்கும் சேவை செய்திட வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கல்லூரி செயலர் ரவி, முதல்வர் மீனாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios