பாளையங்கோட்டையில், திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் உருவாக ரூ.3.50 கோடியில் செயற்கை இழை ஓடுதளத்தை அமைத்து வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய தடகள பொதுச் செயலர் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஜெர்மன் உதவியுடன் செயற்கை புல் ஹாக்கி மைதானம், வாலிபால், தடகளம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், பாக்சிக், ஸ்கேட்டிங், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், பூப்பந்து, உள் விளையாட்டு அரங்கு, நீச்சல், பழுதூக்கும் மையம் ஆகியன அமைந்துள்ளன.
100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தும் வகையில் சர்வதேச தரத்தில் இரசாயன கலவை கொண்டு செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாளையங்கோட்டைக்கு வந்த இந்திய தடகள சம்மேளனத்தின் பொதுச்செயலர் டி.கே. வல்சன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைப் பொதுமேலாளர் சாந்தன் மற்றும் அதிகாரிகள் செயற்கை ஓடுதளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வல்சன், “இங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஓடுதளம் சர்வதேச தரம் வாய்ந்தது. இந்த தளம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இதன் மூலம் திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கட்டுமானப்பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரலு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் என். சார்லஸ் மனோகர், மதுரை மண்டல முதுநிலை மேலாளர் புகழேந்தி, உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், உதவி பொறியாளர்கள் முருகேசன், பழனிவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர்ஜோதிசற்குணம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
