விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகராம: பல்வீர் சிங்கிற்கு ஜாமீன்!
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாகவும், போலீஸ் காவல் விசாரணையின் போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி திருவேணி முன்னிலையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உட்பட 15 காவலர்கள் நேரில் ஆஜராகினர். காவலர்கள் தரப்பில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
தமிழக பதிவுத்துறை வசூலில் புதிய சாதனை: ஒரே நாளில் ரூ.192 கோடி!
வழககி விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேர் மீது கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.