தமிழக பதிவுத்துறை வசூலில் புதிய சாதனை: ஒரே நாளில் ரூ.192 கோடி!
தமிழக பதிவுத்துறை வசூலில் புதிய சாதனையாக ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் நேற்றைய தினம் (14.12.23) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பதிவுத்துறை சார்பில் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழக பதிவுத்துறை வசூலில் புதிய சாதனையாக ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் ஒரே நாளில் இவ்வளவு தொகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் புதிய மசூதி: அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம்!
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 14.12.2023 அன்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இது வரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும்.” என கூறப்பட்டுள்ளது.