காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு வயது மகனை சுத்தியால் தலையில் அடித்தேக் கொன்ற கணவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தை அடுத்த ஐய்யன்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் லோகநாதன் (43). இவரது முதல் மனைவி சுகந்தா (30). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீப்தியை (20) காதலித்து கடந்த 2014-ல் லோகநாதன் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.

இருவரும் ஊரப்பாக்கம் பிரியா நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோனக் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது.

தீப்தியின் நடத்தை மீது லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 7-ஆம் தேதி இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அன்று நள்ளிரவு, தூங்கிக் கொண்டிருந்த தீப்தி மற்றும் குழந்தை ரோனக் ஆகிய இருவரின் தலையிலும் சுத்தியால் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார் லோகநாதன். பின்னர் இருவரின் சடலங்களையும் போர்வையால் மூடி விட்டு தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.

இதனிடையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வரவே லோகநாதன் பயத்தில் நண்பர்களிடம் தனது மனைவி, மற்றும் மகனைக் கொலை செய்ததைக் கூறியுள்ளார்

இதனையடுத்து லோகநாதனின் நண்பர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சனிக்கிழமை இரவு கூடுவாஞ்சேரி காவலாளர்கள் லோகநாதனை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “லோகநாதன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்”. பின்னர், அவரது வீட்டுக்குச் சென்று தீப்தி, ரோனக்கின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து வண்டலூர் டி.எஸ்.பி. முகிலன், கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.