ஈரோடு 

ஈரோடு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் முதற்கட்டமாக பழுதான கேமராக்களை புதுப்பிக்கும் பணி நடக்கும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "ஈரோட்டில் குற்றச் சம்பவங்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் காவலாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

வாகனங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் முக்கியச் சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்த அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிடப்பட்டு உள்ளது. 

வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில் பழுதான கேமராக்கள், இணைப்பு ஒயர்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி நான்கு வழிச்சாலை பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பெருந்துறை - காஞ்சிக்கோவில் சாலை நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் இரண்டு பக்கமும் தலா நான்கு கேமராக்கள் வீதம் எட்டு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.

இரவு நேரத்திலும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அருகிலேயே கட்டுப்பாட்டு அறையும் உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.