அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவது தொடர்பான வழக்கில், ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் அல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் அல்லாத கோயில்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்ற உத்தரவுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி கட்டப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் சைவக் கோயில்களில், அந்த ஆகமப் பிரிவைச் சாராதவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அரசாணைக்குத் தடை கோரி மனு:

அந்த மனுவில், "ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களில் பரம்பரை பரம்பரையாக பணிபுரிந்து வரும் சிவாச்சாரியார்கள், பட்டர்கள், குருக்கள், ஆதி சைவர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி செயல்படவும், தமிழக அறநிலையத் துறையின் இந்த அரசாணைகளுக்குத் தடை விதிக்கவும் வேண்டும்" என்று அந்த அமைப்பு கோரியிருந்தது. இதேபோன்று, வேறு சில அமைப்புகளும் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் இடையீட்டு மனு:

இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 2023-இல் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ரிட் மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், மே 13ஆம் தேதி அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வி.அரங்கநாதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கை:

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராமேஸ்வரம் கோயிலில் போதுமான அர்ச்சகர்கள் இல்லாமல் பூஜை நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆகமக் கோயில்கள், ஆகமம் அல்லாத கோயில்கள்:

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் அல்லாத கோயில்களை அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மணியம் ஆகியோரை நியமிக்கலாம் என்றும் தெரிவித்தது. ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.