supreme court issue bail for sekahr reddy friends

அமலாக்கத்துறை வழக்கில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி சிபிஐ தொழிலதிபர் சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தது. மேலும் அவரது கூட்டாளிகள் பிரேம்குமார், சீனிவாசலு,திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து 5 பேரும் ஜாமீன் கோரி மனு அளித்தனர். சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரையும் அமலாக்கத்துறை திடீரென கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

பின்னர், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்று பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.

அதில் நாள்தோறும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்தது.

ஆனால் மூன்று பேரும் ஆஜராகததால் அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சேகர் ரெட்டி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.

ஆனால் ராமச்சந்திரனும், ரத்தினமும் ஆஜராகவில்லை. இந்நிலையில், கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அவர்கள் இருவருக்கும் மூன்றாவது முறையாக நேற்று சம்மன் அனுப்பியது. 

இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை வழக்கில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 

உயர்நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.