செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - விசாரணை தள்ளி வைப்பு!
செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவரது நீதிமன்ற காவல் வருகிற 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரி அமலாக்கத்துறை சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
வழக்கு விசாரணையின் போது, பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய கபில் சிபல், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என வாதிட்டார். அதேபோல், செந்தில் பாலாஜி கைது செய்து விசாரிப்பது தங்களுக்குள்ள சட்டஉரிமை என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவியின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.