super star asks for the support of Karnataka for his upcoming movie

ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில், நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஜினி படம் என்றாலே பிரம்மாண்டமான கட் அவுட்டுகள், பேனர்கள் என கலக்கலாக ரிலீஸ் ஆகும். டிக்கெட் முன்பதிவிற்கு கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த முறை இது ரஜினி படம் தானா? என ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் மந்தமாக இருக்கிறது டிக்கெட் விற்பனை.

இதற்கெல்லாம் காரணம் ரஜினியின் அரசியல் வரவு தான். அரசியலுக்கு வரப்போவதாக முடிவு எடுத்த ரஜினி, அதனை தொடர்ந்து செய்த செயல்கள் அவருக்கே இப்போது எதிராக திரும்பி இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சனையில் மக்கள் தரப்பில் பேசாமால், ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக ரஜினி பேசியது, தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

அதே சமயம் கன்னடர்களும் காலாவிற்கு எதிராக கிளம்பி இருக்கின்றனர். காவிரி விவகாரத்தில், ரஜினி தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். என காரணம் கூறி, காலாவை திரையிட கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது கர்நாடகாவில்.

இன்று போயஸ் கார்டனில் வைத்து இது குறித்து பேசிய ரஜினி, கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் செய்ய ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என புரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்பொழுது, காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலா படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியானது இல்லை. என கூறியிருக்கிறார்

படத்தை பிரச்னையின்றி ரிலீஸ் செய்வதுதான் வர்த்தக சபையின் வேலை. அவர்கள் தடை விதிப்பது சரியில்லை என தெரிவித்திருக்கும் ரஜினி, காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு, முதல் அமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என கூறி இருக்கிறார். ஆனால் குமாரசாமி தான் நேற்று தனுஷிடம், எந்த பிரச்சனை நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு என கைவிரித்தார்.

மேலும் காலா பட விவகாரத்தில் கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் . காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேட்டியின் இறுதியில் கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். காலாவிற்காக ரஜினி இவ்வாறு இறங்கி பேசி இருப்பது, அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.