Students should avoid tying caste symbolism

இராமநாதபுரம்

சாதி உணர்வைத் தூண்டும் விதமாக மாணவர்கள் கை மற்றும் கழுத்துக்களில் அடையாளச் சின்னமாக கயிறு கட்டுவதை முற்றிலும் தவிர்க்க அறிவுரை கூறி வழிகாட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் கல்வியில் முதலிடம் பெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் ஆட்சியர் எஸ்.நடராஜன் அறிவுறுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.

அப்போது அவர், “பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவரும் எவ்வித சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் சிறப்பாக கல்வி பயின்று தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும்.

ஒற்றுமையே வலிமை என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகளை நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்திட வேண்டும்.

மாணவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க தக்க அறிவுரைகளை மாணவ, மாணவியர்க்கு ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும்.

சாதி உணர்வைத் தூண்டும் விதமாக மாணவர்கள் கை மற்றும் கழுத்துக்களில் அடையாளச் சின்னமாக கயிறு கட்டுவதை முற்றிலும் தவிர்க்க அறிவுரை கூறி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

பிளஸ்-2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3-வது இடத்தையும் தக்க வைத்து இராமநதாபுரத்துக்கு பெருமை சேர்த்தற்கு ஆசிரியப் பெருமக்களே காரணமாகும்.

இக்கல்வியாண்டில் இராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், உதவிக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சர்வேஷ்ராஜ் உள்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலரும் பங்கேற்றனர்.