பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்குச் செல்ல முடியாத 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

பள்ளி செல்லாமல் வீடுக்கு திரும்பிய மாணவர்கள்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமோடு பள்ளிக்கு சென்ற நிலையில் சில மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறைக்காடு என்னும் மலைக்கிராமம்.போடியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மலைக் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 30 மாணவ,மாணவிகள் உள்ளனர்.இவர்களுக்கு பள்ளிக்கூட வசதி இல்லாததால் இவர்கள் இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடிக்கு வந்தது தான் படித்துச் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு வரை இங்கிருந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு,இரண்டு ஆட்டோக்களில் மாணவ மாணவிகள் காலை பள்ளி செல்வதற்கும், மாலை வீடு திரும்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மாணவ மாணவிகள் தினந்தோறும் ஆட்டோவில் போடிக்கு சென்று படித்துவிட்டு திரும்பினர்.

ஆட்டோ கட்டணம்- கை விரித்த அரசு

இந்தநிலையில் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால்,வழக்கம்போல தங்களை அழைத்துச் செல்ல ஆட்டோ வரும் என்று மாணவ மாணவிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆட்டோ எதுவும் வரவில்லை. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் ஆட்டோக்களை அனுப்ப முடியாது என்றும், தங்கள் மாற்று ஏற்பாடு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் படியும், இல்லையென்றால் ஆட்டோவிற்கான கட்டணமாக மாதம் 20 ஆயிரம் ரூபாயை நீங்களே கட்டி நீங்களே ஆட்டோ ஏற்பாடு செய்து அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுடன் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரனை சந்தித்து, உடனடியாக தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனு அளித்தனர். 

ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறும் போது, தினம்தோறும் 200 ரூபாய் கூலி வேலைக்குச் செல்லும் மலைக்கிராம மக்களான தங்களால் ஆட்டோ வாடகை செலுத்த முடியாது என்றும், பள்ளிக்குச் செல்ல இயலாததால் தாங்கள் படிக்காமல் போனதாகவும், நம் பிள்ளைகளாவது படித்து ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வாகன வசதி இல்லாத காரணத்தால் அவர்களும் தற்போது பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதிக்குட்பட்ட கொட்டக்குடி, கொழுக்கு மலை,முதுவாக்குடி, டாப்ஸ்டேஷன், அகமலை,சொக்கனலை, கன்னக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு இதுவரை பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

Tamilnadu School Reopens: அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு..! நடனமாடி மகிழ்ந்த சிறுவர்கள்