தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்-பாஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து கிட்டதட்ட 18 மாதங்களாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில்,நவம்பர் மாதம் முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்ட முடிவில் தமிழகத்தின் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டார். ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 8ஆம் ஆண்டு வரை எந்த மாணவரையும் பெயில் செய்யக்கூடாது. இந்நிலையில், அத்துடன் சேர்த்து 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்பாஸ் செய்யப் பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து முதலில் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, விகிதாச்சார முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது தான் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து, மாணவர்கள் விடுமுறையில் உள்ள நிலையில், 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்-பாஸ் செய்யத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையில் சமீபத்தில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு கூறிய தேதிகளை அரசு தேர்வுகள் துறை அறிவித்தது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரையிலும் பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
