வேலூர்

வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நிலுவையில் உள்ள மொத்த கட்டணத்தையும் செலுத்திய பிறகே தேர்வு கட்டணம் வாங்கப்படும் என்று அலைக்கழித்ததால் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கீழ் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், வரும் மே மாத தேர்வுக்கான கட்டணங்களைச் செலுத்த மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாள் எனும் நிலையில், தாமதக் கட்டணத்துடன் செலுத்த மார்ச் 26 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

இதனால் 151 மாணவ, மாணவிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வந்த நிலையில், கல்லூரி கட்டணத்தை பாக்கி வைத்திருப்பவர்கள் அதைச் செலுத்திய பிறகே தேர்வுக் கட்டணத்தைப் பெற இயலும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

மேலும், இந்த தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் மதியம் 3 மணிக்குள் மட்டுமே செலுத்த இறுதிநேரம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால், 3 மணி வரை தேர்வுக் கட்டணத்தை நிர்வாகம் பெற மறுத்துள்ளது.  

இதனால், தங்களுக்கு ஒரு வருடம் வீணாகி விடும் என்று வேதனை அடைந்த மாணவர்கள், அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். 

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியர் பாபு, மாணவர்களை சமாதானம் செய்து, கல்லூரிக்கு அழைத்துச்சென்று, நிர்வாகி மெர்க்குரி சத்தியநாராயணன், முதல்வர் தாமோதரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆனால், கடைசி நாள் முடிந்த நிலையில் எதுவும் செய்ய இயலாது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுபாட்டாளரிடம் பேசி இரண்டு நாள்கள் தனி அனுமதி பெற்றுத் தருவதாக, நிர்வாகிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.