இடைநீக்கம் செய்யப்பட்ட கல்லூரி மாணவர் மீண்டும், கல்லூரிக்கு அனுமதிக்கப்படாததை அடுத்து மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சுபலஷ்மி. கல்லூரி படிக்கும் வயதில் மகன் இருந்தார். அவரது பெயர் ஜெகதீஷ் (18). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி.ஐ.டி துறையில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆனந்தகுமாரும் சுபலஷ்மியும் கோயிலுக்கு சென்ற அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, ஜெகதீஷ் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். 

ஜெகதீஷ் உடல் அருகே, கடிதம் ஒன்று இருந்துள்ளது. அந்த கடிதத்தில், துறைத் தலைவர் ராமராஜ்தான் எனது தற்கொலை முடிவுக்கு முழு காரணம். அவரால் நான் ஆழ்ந்த மன அழுத்தத்தில் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷின் பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஜெகதீஷ் உறவினர்களிடம் சமரசம் பேசிவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜெகதீஷ் தற்கொலை குறித்து அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களிடம் விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இரு மாணவ குழுக்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அதில் ஒரு குழுவில் ஜெகதீஷ் இருந்துள்ளான். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜெகதீஷை ஒரு வாரக் காலம் இடை நீக்கம் செய்து தண்டனை அளித்தது. ஒரு வாரம் இடை நீக்கம் முடிந்தது மீண்டும் கல்லூரிக்கு வந்த ஜெகதீஷை, துறைத் தலைவர் ராமராஜ் அனுமதிக்க மறுத்து விட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி மற்ற மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியுள்ளார்.

ஜெகதீஷின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொல் அவர்களையும் அவமானப்படுத்தியுள்ளார். அப்போது, ஜெகதீஷின் பெற்றோர் ராமராஜின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இதைப் பொருட்படுத்தாத ராமராஜ் அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் ஜெகதீஷ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.