மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோக அலைகளை எழுப்பி உள்ளது. அனிதாவின் சாவுக்கு, நீட் தேர்வே காரணம் என்று
அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் சாவுக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மாணவி அனிதாவின் சாவுக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அரசு, அரசாக இல்லை என்பதால் எதையும் எதிர்பார்க்க முடியாது.

மாணவி அனிதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிவாலயத்தில் என்னைச் சந்தித்ததார். +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்திருந்தால், மருத்துவ படிப்பில் மாணவி அனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு
தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.