கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவித்ததைத் தொடர்ந்து 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற 6ம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவர்களுக்கான கட்டணத்தை (Tution Fees) மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து வழங்குகின்றன. ஆனால் 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான RTE கட்டணத்தை விடுவிக்காமல் இருந்தது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதனால் RTE திட்டத்தின் கீழ் வருகின்ற 6ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் 1 முதல் 8ம் வகுப்பு வரை அல்லது LKG முதல் 8ம் வகுப்பு வரை தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஏற்கனவே பள்ளியில் படித்து வருபவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

மேலும் ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்தியிருந்தால் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் அதில் இருந்து 7 நாட்களில் நீங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர், குழந்தைகள் நிம்மதி அடைந்துள்ளனர்.