strike announced by transport employees
அமைச்சர் உடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி என்றும், வேலை நிறுத்தம் தொடரும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
முதல்வருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்து முதல்வருடன் அவரச ஆலோசனை நடத்தப் பட்டது.
முதலமைச்சருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய ஆலோசனையின் முடிவில், அடுத்து நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப் பட்டது.
இந்நிலையில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளன.
2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு வினர் அறிவித்துள்ளனர். 2.44% ஊதிய உயர்வை எக்காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இதை அடுத்து சென்னை மட்டுமல்லாது, புறநகரிலும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி முடிவு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் இந்த திடீர் வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேட்டில் பஸ்கள் இயக்காமல் நிறுத்தப் பட்டிருப்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். பேச்சு வார்த்தையில் இழுபறி காரணமாக திடீரென்று சில இடங்களில் பஸ் இயக்கப் படாமல் உள்ளன. பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், அலுவலகம் முடிந்து செல்லும் ஊழியர்கள் அவதி அடைந்தனர்.
