அதிமுக - பாஜக கூட்டணியா.? ஆடிட்டர் குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகமாக இருக்கும் என்றும், திமுக பொங்கல் தொகை வழங்கவில்லை என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
எம்ஜிஆர் பிறந்தநாள்- எடப்பாடி மரியாதை
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கியவர் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக் வெட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்தவர்.
கோடி கோடியாக கொள்ளை
குடும்ப ஆதிக்க பிடியில் இருந்து தமிழகம் விடுப்பட வேண்டும் என அதிமுகவை தோற்றுவித்து தமிழகத்தில் ஆட்சி 11 வருடங்கள் முதலமைச்சராக ஆட்சி புரிந்தார் எம்.ஜி.ஆர் என கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியமாக நடைபெறுமா என கேள்வி எழுப்பியவர், இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாயும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் இதை கண்டு கொள்ளாது என விமர்சித்தவர் திமுக கோடி கோடியாக கொள்ளை அடித்து வைத்துள்ளது எனவும், அதை செலவு செய்து இடைத்தேர்தலை திமுக சந்திக்கும் என கூறினார். அதிமுக வை பொருத்தவரை தேர்தலுக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல எனவும் 2026 ஆம் ஆண்டு தேர்தில் ஸ்டாலின் பாட்சா பலிக்காது எனவும் தெரிவித்தார்.
இதோடு நிறுத்துங்க- ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் தொகை வழங்காமல் மக்களை வஞ்சித்துள்ளது திமுக எனவும் 500 கோடியில் கருணாநிதி பன்னாட்டு மையம் அமைக்க பணம் இருக்கிறது ஆனால் பொங்கல் பரிசு தொகை கொடுக்க முடியவில்லை என தெரிவித்தார். பாஜக அதிமுக இணைய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர், அவர் இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
குருமூர்த்தி வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தில் பாஜகவோடு கூட்டணி இல்லை என கட்சி எடுத்த முடிவு. மீண்டும் அதிமுகவை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசினால் குருமூர்த்தி நன்றாக வாங்கிக் கட்டி கொள்வார் என எச்சரித்தார்.