அவனியாபுரம்,
அவனியாபுரத்தில், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதியும், நீதியும் வேண்டி விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் ஞாயிற்றுக்கிழமை லோடுமேன் மாரிச்சாமி என்பவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இன்குலாப், பாண்டியம்மாள், ஐயங்காளை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் மதுரை விமானநிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று மறியலின் போது முழக்கமிட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளார் முத்துக்குமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு, சப்–இன்ஸ்பெக்டர் அழகுமுத்து உள்ளிட்ட காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
அதைத்தொடர்ந்து அரசு இராஜாஜி மருத்துவமனை அருகே வந்த, அந்த கட்சியினர் கொலை செய்யப்பட்ட மாரிச்சாமியின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்,
கொலையாளிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேவை என்று முழக்கமிட்டவாறு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த காவலாளர்கள் மறியல் செய்தவர்களிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.
