தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்களை வந்த வாகனங்களை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் திடீரென கல்வீசி தாக்கினர். இதில்  இரண்டு பேருந்துகள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிறுமி உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி 12 இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் ஆலையை இயக்குவதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலை முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலை உதவி தலைவர்கள் தனவேல், திவாகரன் ஆகியோர் தலைமையில் இரண்டு பேருந்துகளில் 50–க்கும் மேற்பட்ட ஆலை ஊழியர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். 

அவர்கள் ஆட்சியர் வெங்கடேசை சந்தித்து ஊழியர்களின் கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், "ஸ்டெர்லைட் ஆலையால் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன. 

ஆலை மூடப்பட்டிருப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆலையை இயக்க உரிய அனுமதி அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்த தகவல் அறிந்தவுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி, பிரபு, ராஜா, தமிழ்செல்வன், மகேஷ் உள்ளிட்டோர் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஏராளமானவர்கள் மடத்தூர் விலக்கு பகுதியில் திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கள் குடியிருப்புகளுக்கு புறப்பட்டனர். அவர்கள் மூன்று பேருந்துகள் மற்றும் ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். முதலில் ஒரு பேருந்தும், வேனும் மடத்தூர் விலக்கு பகுதியில் வந்தது. 

அங்கு திரண்டிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அந்த பேருந்தை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென பேருந்து கல்வீசி தாக்கப்பட்டது.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பேருந்தின் முன்பகுதியில் இருந்த ஒரு சிறுமி, ஓட்டுநர் உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். இந்த பேருந்துக்கு பின்னால் வந்த வேனில் இருந்து சாவியை போராட்டக்காரர்கள் பறித்ததால் அந்த வேனில் இருந்த பெண்கள், குழந்தைகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் ஆய்வாளர் அரிகரன், உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காவலாளர்கள், கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தை அங்கிருந்து சிறிது தூரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். வேன் சாவியை போராட்டக்காரர்கள் பிடுங்கி சென்றதால், வேனில் இருந்தவர்கள் ஆலை ஊழியர்களின் உதவியுடன் வேனில் இருந்து இறங்கி கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தில் செல்வதற்காக சாலையில் நடந்து சென்றனர். 

அந்த வழியாக ஸ்டெர்லைட் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு பேருந்துகள் வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலை எதிர்ப்பாளர்கள் அந்த பேருந்துகளையும் கல்வீசி தாக்கினராம். இதில் ஒரு பேருந்தின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அந்த வழியாக வந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடிகளையும் உடைந்தது. 

அதன்பிறகு காவலாளர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.