திருநெல்வேலி 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிவகிரி நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தார். 

வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர் சீனிவாசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இசை மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில்  இறுதியில் மருத்துவர் பாசறை செயலாளர் கற்பகராசு நன்றித் தெரிவித்தார்.

அதேபோன்று கடையத்தில், "ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கடையம் சின்னதேர் திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தினகரன் தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய செயலாளர் பாலமுத்து, இளைஞர் பாசறை துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், மாநில மகளிர் பாசறை செயலாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

தொகுதி செயலாளர் நாகலிங்கம், தலைவர் முத்துராசு, துணை செயலாளர் செந்தில், இளைஞர் பாசறை செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.