சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால், தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் சிலை கடத்தல் தொடர்பான புகார்கள், வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றார். இதனையடுத்து உடனடியாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.