திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர் காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்தது. மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை. மதத்தின் பெயரில் பாஜக தமிழகத்தில் கலவரம் உருவாக்குவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி உத்தரவு சரியா? தவறா?

இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செய்யாததால் அரசு ஊழியர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த தமிழக அரசு, ''இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் அதுவரை காத்திருக்க வேண்டும். நீதிபதி உத்தரவு சரியா? தவறா? என்பதற்கு தான் மேல்முறையீடு சென்றுள்ளோம்.

திருப்பரங்குன்றம் மலை எங்கும் போய் விடாது

ஆகவே அதன்பின்பே வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள் திருப்பரங்குன்றம் மலை, திரி, எண்ணெய் எங்கும் போய் விடாது. கோயில்களில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தேவஸ்தானமே முடிவு செய்யும். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஏன் நீதிமன்றம் கூட இதை சொல்ல கூடாது. இதற்கான உத்தரவுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். ஏதும் பிரச்சனை வந்தால் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றத்தை கைகாட்ட முடியாது'' என்று தெரிவித்தது.

தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும்

இதன்பின்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் பிரச்சனை மட்டுமல்ல; சொத்து உரிமை தொடர்பானதும் கூட. அரசு கோரிக்கையை ஏற்று இப்போது வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு இல்லை என்றால் ஒத்திவைக்க முடியாது''என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர், மதுரை காவல் இணை ஆணையர் ஆகியோர் வரும் 17ம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.