சிலை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால் இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஓராண்டாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சிலை கடத்தல் தொடர்பான அறிக்கைகளை ஓராண்டாக பொன்.மாணிக்கவேல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. 

அவர் விசாரணையில் அதிருப்தியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் போலீசார் மீது மாநில அரசுக்கு திருப்தியில்லை என கேள்வி எழுப்பினர். கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.