பவளவிழா கொண்டாடும் முரசொலி நாளிதழின் வாழ்த்தரங்கம், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, இந்து ராம், நடிகர்கள் ரஜினி, கமல், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியால் தொடக்கப்பட்ட முரசொலி, பல்வேறு வடிவங்களுக்குப் பிறகு, தற்போது 75 ஆவது ஆண்டை எட்டியுள்ளது. 

முதன் முதலாக முரசொலி துண்டறிக்கையாக துவக்கப்பட்டது. பின்னர், வார இதழாகவும், நாளேடாகவும் வடிவம் எடுத்தது. தற்போது, முரசொலி நாளிதழ் தனது 75 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

முரசொலி நாளிதழின் பவள விழாவுக்காக திமுக, மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக, சென்னை, கோடம்பாக்கம் முரசொலி நாளிதழ் அலுவலகத்தில், முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது. முரசொலி காட்சி அரங்கத்தை, இந்து ராம் திறந்து வைத்தார். 

இதில் முரசொலி கடந்து வந்த பாதை மற்றும் அதன் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த விழாவில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, முரசொலி நாளிதழின் பவளவிழா வாழ்த்தரங்கம், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. 

இந்த விழாவில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், இந்து ராம், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டுள்ளனர். முரசொலி பவளவிழாவில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார்.

தினமலர் ஆசிரியர் ரமேஷ், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.