போதுமான அளவு நிதி வசதி செய்து தரக்கோரி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வைத்துள்ள நகைகளையும், அன்றாட தேவைகளுக்கு சங்கங்களில் சேமித்து வைத்திருக்கும் பணத்தையும் திருப்பி எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடனை தவணை தேதியில் செலுத்த முன் வந்த போது அதை சங்கங்களால் பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமப்புற மக்கள் கூட்டுறவு சங்கங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு போதிய நிதி வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விக்டர்தாஸ், முருகன், கிருஷ்ணன், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கூட்டுறவு வங்கிக்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுபற்றி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறுகையில், ‘பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வகையில் ஒட்டு மொத்த பணியாளர்கள் சார்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிதி வசதி கோரப்பட்டுள்ளது.

நிதி வசதி செய்து தரும் வரை கூட்டுறவு சங்கங்களில் பணி மேற்கொள்வதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இதனால் 100–க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுள்ளது‘ என்றுத் தெரிவித்தார்.