State hospitals without bedding Patients suffered in dengue sleep floor
தருமபுரி
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் குளிர்ந்த தரையில் படுத்து சிகிச்சைப் பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அ.மல்லாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், ஏராளமானோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால் அங்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படுக்கை வசதிகள் இல்லாதால் தரையில் படுத்துக் கொண்டுச் சிகிச்சைப் பெறும் அவல நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து மக்கள், “பாலக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் குளிர்ந்த தரையில் படுத்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாகிவிடும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அமைக்க வேண்டும். காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுமருந்து, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
