நுங்கு தின்னவன் ஓடிட்டான் நோண்டி தின்னவன் மாட்டிகிட்டான் என்பது போல தான் தமிழகத்தில் பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதுபோல தான் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

செவிலியர்கள் என்றாலே இரக்க குணமும் பொறுமை தன்மையும், சாந்தமான முகபாவனையும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் மருத்துவ படிப்பில் கற்று கொள்ளவேண்டிய முக்கிய அத்தியாயம். ஆனால் அதற்கு எதிர்மறையாக தான் தற்போது உள்ள மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியில் நர்சுகள் யாரும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆளில்லாத மருத்துவமனை குறித்த வீடியோ வைரலாக பரவியது.

அதேபோன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனியில் வேறு ஒரு சுவாரசிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.

இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பல உறவினர்கள் நோயாளிகளை பார்க்க வருவது வழக்கம். ஒவ்வொரு நோய் பிரிவுக்கும் ஒவ்வொரு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த மருத்துவமனையின் இதய சிகிச்சை நோயாளி பிரிவு 3 வது மாடியில் உள்ளது. வழக்கம்போல் இன்றும் ஏரளாமான நோயாளிகளை அவர்களது உறவினர்கள் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் டூட்டி நர்ஸ் தனது பணியை செய்துகொண்டிருந்தார். அதில் ஒரு நோயாளியை பார்க்க வந்த உறவினர்கள் அதிக பேர் இருந்ததால் வெளியே போக சொல்லியுள்ளார்.

அப்போது நர்சுக்கும் நோயாளியின் உறவினர்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நர்ஸ் மூன்றாவது மாடியின் வெளி கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

இதனால் யாரும் உள்ளேயும் போகமுடியாமல் வெளியேயும் வர முடியாமல் ஒரு மணி நேரம் நோயாளிகள் தவித்து வந்தனர்.

இந்நேரத்தில் யாராவது நோயாளியின் உடல் நிலை பாதிப்படைந்திருந்தால் யார் பொறுப்பு என்று நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் நோயாளிகளுக்கு சாப்பாடு மற்றும் மருத்துகள் கொடுக்க முடியாநிலை ஏற்பட்டது.

இதையடுத்து 8.15 மணிக்கு பூட்டிவிட்டு சென்ற நர்ஸ் ஒருமணி நேரம் கழித்து 9.15 மணிக்கு கதவை திறந்து விட்டார்.

இதில் காமெடி என்னவென்றால் நர்சிடம் வாக்குவாதம் செய்த நபர்கள் அப்பொழுதே கிளம்பி விட்டனராம்.