சேதுபாவாசத்திரம் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதால், கடலில் தனிமையில் தவித்த நான்கு மீனவர்களை கடலோர காவல்துறையினர் மீட்டனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காட்டைச் சேர்ந்தவர் சேவியர் (23). இவருக்கு சொந்தமான பைபர் படகில் சேவியர், அதே பகுதியை சேர்ந்த எட்வின் (19), சேசையா (58), ஏரிபுறக்கரையை சேர்ந்த ராஜீவ் (26) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

புதன்கிழமை மல்லிப்பட்டினத்திலிருந்து கிழக்கே மீன்பிடித்துவிட்டு கரை திரும்ப முயன்ற போது திடீரென படகு பழுதாகி நின்றுவிட்டது.

கடலோர காவல்படை எண்ணிற்கு அழைக்க நினைத்தால் சிக்னல் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

பின்னர், சிக்னல் கிடைத்தது சென்னை 1093 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பட்டுக்கோட்டை கடலோர காவல்துறை துணைகண்காணிப்பாளர் குமரவேலுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் அவர் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராசசேகர், படகு சப்-இன்ஸ்பெக்டர் வில்வநாதன் ஆகியோர் ரோந்து படகு மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கே கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும், பழுதான படகையும் மீட்டு கொள்ளுக்காடு மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டுவந்துச் சேர்த்தனர்.

மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களும் திரும்பி வர தாமதமானதால் அவர்களது உறவினர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர், இவர்களைப் பார்த்த பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பினர்.