MK Stalin condemns TVK government : விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக-வின் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்குவதாகவும், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுபற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், தவெக அரசு ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறியுள்ளார். அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே இதுபோன்ற கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் ஆளும் கட்சியால் குறிவைக்கப்படுவதாகவும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துக்களையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அவதூறு வழக்குகளில் கூட சம்பந்தமில்லாத கிரிமினல் குற்றச்சாட்டுகளை சேர்ப்பது ஏன் என நீதிமன்றங்களே கேள்வி எழுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை சந்திக்க அவரது வழக்கறிஞரையோ, ஆதரவாளர்களையோ அனுமதிக்கவில்லை என்றும், அவருக்கு மருந்து கொடுக்க முயன்றவர்கள்கூட தடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது அடிப்படை சட்ட மற்றும் மனித உரிமைகளை மீறும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் கண்டனம்
மற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்கத் தவறும் அரசு, அரசியல் எதிரிகளின் விமர்சனங்களுக்கு மட்டும் உடனடியாக கைது நடவடிக்கையை மேற்கொள்வது ஏன்? என்றும் திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சியினரின் 'சட்டவிரோத உத்தரவுகளை' நிறைவேற்றாமல், காவல்துறை சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

மார்க்கண்டேயன் கைது குறித்து டிகேஎஸ் இளங்கோவனும் கருத்து தெரிவித்துள்ளார். ஆளும் தவெக-வின் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், திமுக தலைவர்களைப் பற்றி இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இளங்கோவன், "யாரும் மற்றவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசக்கூடாது. அது சரிதான். எங்கள் எம்.எல்.ஏ-வை கைது செய்துள்ளதால், தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் எங்கள் தலைவரைப் பற்றி என்ன பேசியிருக்கிறார்கள் என்று பார்க்கிறோம். அவர்கள் தவறாகப் பேசியிருந்தால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து நீதிமன்றத்திற்குச் செல்வோம்," என்றார்.
"இதேபோல பேசும் தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் எத்தனை பேர் கைது செய்யப்படுகிறார்கள் என்று பார்ப்போம்," என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். ஆளும் கட்சியை விமர்சித்த இளங்கோவன், அதன் தலைவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், தங்கள் அதிகாரத்தைக் காட்ட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். "அரசியலே தெரியாத ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்ட விரும்புகிறார்கள், அவ்வளவுதான்... அதுதான் தவெக. தவெக என்றால் என்ன என்பதை மக்கள் மிக விரைவில் அறிந்துகொள்வார்கள்," என்றும் அவர் கூறினார்.


