காவிமயமாக்க சதித்திட்டம்... பாசிசத்துக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்- ஸ்டாலின்
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள் இப்போது தூர்தர்ஷன் நிறத்தையும் மாற்றியுள்ளதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவி நிறத்தில் தூர்தர்ஷன்
இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் லோகோ நீல நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சி இது என பலரும் எதிரப்பு குரல் எழுப்பியுள்ளனர். இதற்கு தூர்தர்ஷன் நிறுவனர் இது “தங்களின் புதிய அவதாரம்..” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தேர்தல் முடிவுகள் உணர்த்தும்
தற்போது Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதே போல மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறுகையில், மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வரும் சூழலில், இத்தகைய கொடூர காவிமயமாக்கலை, தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக இதை நிறுத்த வேண்டும். நிறம் மாற்ற நடவடிக்கையை திரும்பப் பெறச் செய்து, தூர்தர்ஷன் லோகோவின் நிறம் ஏற்கெனவே இருந்தபடி பழைய நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
காவி நிறம்: லோகோ சர்ச்சைக்கு தூர்தர்ஷன் விளக்கம்!