Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல் திறப்பு !! ரங்கா…. கோவிந்தா என பக்தர்கள் முழக்கம்…

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் போன்ற இடங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 

srirengam renganathar sorgavasal
Author
Trichy, First Published Dec 18, 2018, 8:38 AM IST

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வந்தார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
srirengam renganathar sorgavasal
நேற்று பகல் பத்து உற்சவத்தின் பத்தாவது  திருநாளாகும். இதனையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெற்றது. காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்பட்டது.  
srirengam renganathar sorgavasal
மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவை நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆர்யபடாள் வாசல் அடைந்து இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சேர்ந்தார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

இந்நிலையில் ஏகாதிசி உற்சவ நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில், சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.  தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
srirengam renganathar sorgavasal
இதே போல சென்னை திருவெல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலிலும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

மேலும் கோவை காரமடை ரங்கநாதர், புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios