தமிழக மீனவர்களின் இழுவை மடி மீன்பிடி முறையால் இலங்கையின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி, இலங்கைக் கடற்படையின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
தமிழக மீனவர்களை சுட இலங்கை மீனவர்கள் சங்கம் கோரிக்கை : தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது மீன் பிடி தொழிலாகும். அந்த வகையில் ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை துறைமுகங்களில் கட்டப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தி்ல் மீன்படி தடைக்காலம் காரணமாக சுமார் 2 மாத காலம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் வருகிற ஜூன் 16ஆம் தேதி முதல் மீண்டும் மீன்பிடிக்க செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது குற்றம் சாட்டும் இலங்கை மீனவர்கள் சங்கம்
யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் என்பதால் கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமான கடற்தொழில் சிறப்பாக செய்து வந்ததாக தெரிவித்தார். மேலும் வருமானமும் திருப்திகரமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், இந்திய மீனவர்கள் மீண்டும் வருகிற 16ஆம் தேதி முதல் கடற்பரப்புக்குள் வர இருப்பதாக தெரிவித்தார். தமிழக மீனவர்கள் இழுவை மடி மூலம் மீன் பிடிப்பதால் இலங்கையின் இயற்கை வளம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக மீனவர்களை சுட்டுப்பிடிக்க இலங்கை மீனவர்கள் கோரிக்கை
இந்த நிலையில் இலங்கை கடற்படை தோளோடு தோள் நின்று மீனவர்களுக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரண்டு நாட்டு அரசாங்கமும் மீனவர்கள் பிரச்சனையில் ஒரு நல்ல முடிவை கூற வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் இலங்கை கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுப்பதாக தெரிவித்த அவர், இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படக்குகளை கைப்பற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே இலங்கை மீனவ சங்கத்தின் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
