மீண்டும் இலங்கை கடற்படை அடாவடி..! 5 படகுகளோடு தமிழக மீனவர்கள் 24 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீனவர்கள் மற்றும் மீன் பிடி படகுகளை பிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள நெடுந்தீவு அருகே 24 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படை அடாவடி
அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தில் இதுவரை 252 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களை மீட்பது தொடர்பாக மீனவ அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்