தமிழ்நாடு இவ்வளவு அமைதியாக இருக்கிறதே என சிலருக்கு வயிறு எரிகிறது.. பாஜகவை மறைமுகமாக சாடும் முதல்வர்.!
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.
ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் என அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகையில்;- அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது. கடந்த ஆட்சியில், பத்தாண்டு காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
இதையும் படிங்க;- மோடி அரசின் கைக்கூலி ஆளுநர் RN.ரவி! கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ?இறங்கி அடிக்கும் வேல்முருகன்
நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை. நான் முதல்வன் திட்டமானாலும்; ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்; புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான். இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும்.
இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம். இவை அனைத்தும், ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்திக் காட்டும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து -தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி – பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள் போய், யாரிடம், உங்களுக்கு தெரியும், பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.
இதையும் படிங்க;- திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல்வர்.. போற போக்கில் வாரிசு அரசியலை விளாசிய கடம்பூர் ராஜூ..!
'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம். “புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ” என்று சொல்வார்களே, அதுபோல சிலர் “ஆபத்து – ஆபத்து” என்று அலறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிச் சொல்லும் சிலருக்கு, ’இருக்கும் பதவி நிலைக்குமா’ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை. தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன். அந்தக் குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்துக் கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- அப்பாடா! ஒருவழியாக கோபம் குறைந்த முதல்வர் ஸ்டாலின்? முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு திமுகவில் முக்கிய பதவி