Sri Lanka is definitely a separate Eelam will fly Eelam National Flag - Vaiko confirmed ...
திருநெல்வேலி
“இலங்கையில் நிச்சயம் தனி ஈழம் அமையும். அங்கே நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கும்” என்று திருநெல்வேலியில் நடந்த பாராட்டு விழாவில் வைகோ பேசினார்.
திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஜெனிவா மனித உரிமை குழுவில் தமிழர்களுக்காக உரிமைக் குரல் கொடுத்த வைகோ-விற்கு பாராட்டு விழா மற்றும் வழக்கறிஞர் சுப்புரத்தினம் உருவப்படம் திறப்பு விழா ஆகியவை திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று வழக்கறிஞர் சுப்புரத்தினம் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: “திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தில் 1969-ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்து இரத்தினவேல் பாண்டியன், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் இளம் வழக்கறிஞராக சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
அந்தப் பயிற்சிதான் இன்று, நான் தமிழ்நாட்டிற்கு எதிராக எந்தத் திட்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நானே வாதாடுவதற்கு அடித்தளமாக உள்ளது.
திராவிட இயக்கத்தில் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் இரத்தினவேல் பாண்டியன். என்னை மாதிரி யாரும் இருந்தது கிடையாது. ஒரே நாளில் ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராவேன். மற்றொரு வழக்கில் குற்றவாளியாகவும் ஆஜரானேன்.
ஜெனிவாவில் முன்பு நடந்த ஐ.நா. மனித உரிமை குழுவில் நான் பேசும்போது, “இலங்கை மண்ணில் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைவிலங்குடன் கொலைச் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தோண்டி பார்க்க வேண்டும்” என்று பேசினேன். அதை ஏற்றுத் தோண்டிப் பார்த்தபோது 400 எலும்புக் கூடுகள் இருந்தன.
தற்போது நடந்த ஐ.நா. மனித உரிமை குழுவில் நான் பேசுகையில், “உலகத்தின் பூர்விக குடிமக்கள் தமிழர்கள். எங்களுக்கென்று தனிநாடு இல்லை. எங்கள் இனத்தை படுகொலை செய்தவரை இந்த மன்றம் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினேன்.
“இலங்கையில் சிங்களம், ஈழம் என தனித்தனி நாடாக இருந்தது. இங்கிலாந்து அரசு சுதந்திரம் கொடுக்கும்போது ஒன்றாக இணைத்து சிங்களர்களிடம் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு சென்று விட்டனர்.
எனவே, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு என்று தனிநாடு வழங்க வேண்டும். இதற்காக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அழைத்து இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றும் நான் கூறினேன்.
இலங்கையில் நிச்சயம் தனி ஈழம் அமையும். அங்கே நிச்சயம் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கும்” என்று வைகோ பேசினார்.
