பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா ? உங்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது தமிழக அரசு…
பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 17,693 சிறப்புப் பேருந்துகள் வரும் ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏதுவாக, ஆண்டுதோறும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 17 ஆயிரத்து 693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு அதுபற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று 794 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 12-ம் தேதியன்று 1,779 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 13-ம் தேதியன்று 1,872 சிறப்புப் பேருந்துகளும் என இந்த மூன்று நாட்களிலும் 4,445 சிறப்புப் பேருந்துகளுடன் மொத்தம் 11,270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து, வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று 991 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 12-ம் தேதியன்று 2,291 சிறப்புப் பேருந்துகளும், ஜனவரி 13-ம் தேதியன்று 3,141 சிறப்புப் பேருந்துகளும் என இந்த மூன்று நாட்களிலும் 6,423 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதிலும் இருந்து 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
