Loksabha Elections 2024 சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் வாக்களிக்க வகை செய்யும் வகையில், வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வாக்கினை செலுத்த தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரனை!
அதன்படி, சென்னை அருகே தாம்பரத்தில் இருந்து 18, 20 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் 19, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக செல்லும்.
அதேபோல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 18, 20 ஆகிய தேதிகளில் மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கத்தில் 19, 21 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 8.40 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள், சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக செல்லும்.