அதிகாரிகள் துணையுடன் அரசு அனுமதியின்றி, வேலூர் பகுயிர்ல ஏரி மண் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் மணல் கொள்ளையர்களால் ஆயிரக்கணக்கான யூனிட் மணல் முறைகேடாக கடத்தி சென்று, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் அதிக விலைக்கு விற்கின்றனர்.

பூமியின் வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பெரு மழை பெய்தாலும் அடுத்த சில நாட்களில் வறண்டுபோனது. மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர். 

அதை தொடர்ந்து அரசு அனுமதியின்றி ஆறு, ஏரி, குட்டைகளில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதில் ஆற்று மணல் எடுக்க சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் காவேரிப்பாக்கம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக ஏரிகளில் முறைகேடாக மணல் திருட்டு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏரி மண் எடுத்து சென்ற லாரி விரிஞ்சிபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது அணைக்கட்டு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னே சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த சிறிது நேரத்தில், லாரியை செல்ல அனுமதித்தனர்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ ஏரி மண் எடுப்பதற்கான பில் டிரைவரிடம் இருந்தது. அதனால், லாரியை விட்டுவிட்டோம், என கூலாக கூறினர்.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `ஏரியில் மண் எடுக்க இதுவரை யாருக்கும் அனுமதிக்கவில்லை. ஆற்று மணலுக்கு வழங்கப்படும் ரசீது வைத்துக்கொண்டு தேதி மாற்றி ஏரிகளில் மணல் எடுக்கின்றனர்.

மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பழைய ரசீதுகளை கொடுத்து தப்பி விடுகின்றனர். உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடப்பதால் அதிகாரிகள் அதனை கண்டும் காணாமல் இருக்கின்றனர் என தெளிவாக கூறினர்.