தமிழிசை விவகாரத்தில், மாணவி சோபியாவை யாரோ இயக்குகிறார்கள் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று முழக்கமிட்டார். 

இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையில், மாணவி சோபியா கனடாவில் படித்து வருவதும், அவர், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. புகாரின் பேரில் சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

இதற்கிடையே, தமிழிசையின் செயலுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன், சோபியாவை யாரோ இயக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இல. கணேசன், அவரது பின்புலம் பற்றி முழுமையாக விசாரித்து, அவரை இயக்குபவர்களை கண்டறிய வேண்டும். சோபியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது, பண்பாடற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.