பொன்னேகவுண்டன்புதூரில் அரசு மதுக் கடையைத் தாக்கி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவான ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பொன்னேகவுண்டன்புதூர், கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகன் தினேஷ்குமார் (24). இவர், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் காயமடைந்து கோவை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தினேஷ்குமார் அக்டோபர் 30-ஆம் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தினேஷ்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தினேஷ்குமார் உயிரிழந்தபோது மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இறுதிச் சடங்குக்கு வந்த அவரது உறவினர்கள் சிலர் பொன்னேகவுண்டன்புதூரில் உள்ள மதுக்கடை மீது அக்டோபர் 31-ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் சேதமடைந்தன. 

இதுகுறித்து, அன்னூர் காவல்துறையினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நான்கு பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி (24), மகேந்திரன் (17), மனோஜ்குமார் (18), ஜெயகுமார் (26), பிரதீப் (26), பதுவம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் (25) ஆகியோரை அன்னூர் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.