திருநெல்வேலி
 
திருநெல்வேலியில் கிறிஸ்தவ சகாய மாதா ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் தலையில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் கையில் இருந்த செங்கோல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி காலனியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சகாய மாதா ஆலயம் ஒன்று உள்ளது. 

இந்த ஆலய வளாகத்தில் கெபியில் மாதா, குழந்தை இயேசுவுடன் நின்றபடி சிலை ஒன்று உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாதாவுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்று அணிவிக்கப்பட்டது. இந்த கெபி இரவு, பகல் நேரத்திலும் கிறிஸ்தவ மக்கள் வந்து வழிபடும் வகையில் கண்ணாடி கதவுகள் திறந்தே வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை மாதா தலையில் இருந்த கிரீடம் காணாமல் போனது. இரவு நேரத்தில் ஆலய வளாகத்திற்குள் புகுந்து மர்மநபர் யாரோ இந்த கிரீடத்தை திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த கிரீடத்தின் மதிப்பு ரூ.40 ஆயிரம்.

இதுகுறித்து ஆலய பங்கு தந்தை அருள் அம்புரோஸ், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை மற்றும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவலாளர்கள் ஆலய வளாகத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்த்தனர். அப்போது, "அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஆலய வளாகத்துக்குள் நுழைந்துள்ளார். அவர் கெபிக்குள் சென்று மேடையில் ஏறி மாதா தலையில் அணிவிக்கப்பட்டிருந்த கிரீடத்தை திருடிக்கொண்டு வேகமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது".

இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து கிரீடத்தை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.