ஈரோடு

உப்பள தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் நிவாரண தொகை வழங்கவேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐ.என்.டி.யு.சி.) மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.ஆர்.தங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஜி.காளன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். 

இந்தக் கூட்டத்தில், "உப்பள தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் நிவாரண தொகை வழங்கவேண்டும். 

ஐ.என்.டி.யு.சி. சார்பில் வருகிற ஆகஸ்டு மாதம் புது டெல்லியில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்.

தூத்துக்குடியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கட்டுமான பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு உடனே நீக்க வேண்டும். 

கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும். 

ரேசன் கடை தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆதிகேசவன், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் தங்கராசு, மகளிர் அணி பொறுப்பாளர் துளசிமணி உள்பட பலர் பங்கேற்றனர்.