வீண் பழி சுமத்தி தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வெ.பொன்னையனை, காவல்துறை கைது செய்ததற்கு கீழ்பவானி முறைநீர் பாசன சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

“பவானி ஆறு தடுப்பணை தடுப்புக்குழு” என்ற பெயரில் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஈரோட்டில் நேற்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது காவல் துறை மறுத்துவிட்டது.

இந்த நிலையில், சென்னிமலையில் உப்பிலிபாளையத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரனின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்கத் தயாராக இருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையனை எவ்வித காரணமும் இன்றி, வீண் பழி சுமத்தி காவல் துறையினர் கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது மக்களாட்சிக்கு எதிரான செயல்.

அறவழியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் இதுபோன்ற செயலைக் கண்டிக்கிறோம்.

பொன்னையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என கீழ்பவானி முறைநீர் பாசன சபை தெரிவித்துள்ளது.