அதிமுகவின் தலைமையை அடைய காத்திருக்கும் சசிகலாவை வீழ்த்த ஜெயலலிதா உருவாக்கிய நால்வர் அணி தலைத் தூக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது தான் நால்வர் அணி. அந்த நால்வர் அணி தற்போது அதிமுகவின் தலைமையை பிடிக்க பாடுபடும் சசிகலாவுக்கு எதிராக கை கோர்த்துள்ளனர். இதனால், அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

2011-ல் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பில் இருந்தபோது அமைச்சர்களாக இருந்த ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய அணியை அவர் உருவாக்கினார். அவர்களின் ஆலோசனைபடியே, கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனாலேயே அவர்கள் “நால்வர் அணி” என்று அழைக்கபட்டனர்.

மக்களுக்கு வேண்டுமானால் இது புதிதாக தெரியலாம். ஆனால், அதிமுக வட்டாரங்களுக்கு இது பரிட்சயமானது தான்.

பின், 2014-ல், முனுசாமி கழற்றி விடப்பட்டு, அமைச்சர் பழனியப்பன், கூடுதலாக சேர்க்கப்பட்டார். 2016-ல் நடந்த தேர்தலில், விஸ்வநாதன், வைத்திலிங்கம் இருவரும் தோல்வி அடைந்ததால், அந்த அணியில், பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

'சசிகலா நெருக்கடி கொடுத்து, கட்டாயப்படுத்தப் பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்' என ஒ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

இதனையடுத்து, நால்வர் அணியில் இடம் பெற்றிருந்த முனுசாமி, முதல் நபராக ஆதரவு தெரிவித்தார்.

ஒ.பி.எஸாய் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டேன் என்ற சசிகலாவின் அறிவிப்புக்கு பின், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனால், அம்மாவட்டத்தில், இரு துருவங்களாக செயல்பட்டு வந்த விஸ்வநாதன், ஒ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்தார்.

முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா - எம்.பி.,யுமான வைத்திலிங்கமும், ஒ.பன்னீர்செல்வத்தின் பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஜெயலலிதாவில் உருவாக்கப்பட்ட நால்வர் அணி, சசிகலாவுக்கு எதிராக இணைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆகியோரும் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும், தீபா அணியை சேர்ந்த பலரும், ஒபிஎஸ்க்கு ஆதரவு அளிக்க துவங்கி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஒபிஎஸ்க்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார்.

சசிகலாவை, தீபா மட்டும் எதிர்த்து வந்த நிலையில் தற்போது, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான நால்வர் அணியும் களம் இறங்கியுள்ளதால், அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.