தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துகொண்டு வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ''2021-இல் பெற்ற தோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாமல், மறுபடியும் கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து பா.ஜ.க. வருகிறது.
பிரதமர் மோடியின் பழைய வடை
பிரதமர் மோடி இந்த முறையும் வழக்கமான பழைய வடைகளைத்தான் சுட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த மாவும் புளித்துப் போய்விட்டது. பிரதமருக்கு நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3 ஆயிரத்தி 548 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போன்று செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
பிரதமருக்கு எழுப்பிய கேள்வி
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு பதிலாக, மாநிலங்கள் மேல் நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் புதிய திட்டம் எப்போது கைவிடப்படும்? பத்தாண்டுகளாக 'இஞ்ச் இஞ்ச்'-ஆக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைக்கும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போதுதான் எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்கான நிவாரணத் தொகை தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்? ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி எப்போது கிடைக்கும்? கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் ஓடுமா?
தோல்வி பரிசாக கிடைக்கும்
இது எதற்குமே பிரதமர் மோடி அவர்கள் பதில் சொல்லவில்லை. இருந்தால்தானே சொல்வதற்கு! ஆனால், தேர்தல் குறித்த தன்னுடைய கற்பனைகளைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். மாண்புமிகு பிரதமர் அவர்களே... கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நினைவிருக்கிறதா? உங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நீங்கள் அத்தனை முறை வந்து பிரசாரம் செய்தீர்களே? அதற்குப் பரிசாக, முழுமையான தோல்வியைத் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குப் பரிசாகக் கொடுத்தது மறந்துவிட்டதா?
'தி கிரேட்' பத்துத் தோல்வி பழனிசாமி
உங்கள் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தாரே. அவர் என்ன வெறும் பழனிசாமி என்று நினைத்துவிட்டீர்களா? அவர் சாதா பழனிசாமி இல்லை. 'தி கிரேட்' பத்துத் தோல்வி பழனிசாமி! 2019-இல் இருந்து அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைத் தவிர வேறு எதையும் காணாத மாவீரர். இப்படி ஒரு பெயிலியர் கும்பல் சேர்ந்து கொள்கையால் இணைந்திருக்கும் தி.மு.க. கூட்டணியை வீழ்த்தப் போகிறார்களாம்.
அ.தி.மு.க. அரசு இல்லை; NDA அரசு
தமிழ்நாட்டில் NDA அரசு வரப்போகிறதாம், வளர்க்கப்போகிறதாம். பாடுபடப்போகிறதாம். இதை எவ்வாறு பிரதமரால் சிரிக்காமல் சொல்ல முடிகிறது? நன்றாக கவனியுங்கள்... அ.தி.மு.க. அரசு இல்லை. அவர்களே இப்போது NDA அரசு என்றுதான் சொல்கிறார்கள்! நீங்கள் வந்து வளர்க்கும் நிலையிலா நாங்கள் இருக்கிறோம்? தமிழ்நாடு ஏற்கனவே வளர்ந்துதான் இருக்கிறது. நாளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதை நீங்கள் கெடுக்காமல் இருந்தாலே போதும்.
தமிழ்நாட்டை அழிக்கும் எண்ணம் பலிக்காது
தமிழ்நாடு. பொருளாதாரத்தில், தொழில் முதலீட்டில், கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒன்றிய அரசாலேயே மறைக்கவோ, மறுக்கவோ முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறது. உங்கள் புள்ளிவிவரங்களே அதைத்தானே சொல்கிறது. பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டை அழிக்கும் உங்கள் எண்ணம் பலிக்காது.
பிரதமர் பதவிக்கு அழகல்ல
பக்தர்கள் மனம் மகிழும் ஆட்சியை நடத்துகிறோம். காஞ்சிபுரம், கோயில்கள் நிறைந்த நகரம். இங்குக் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால், அந்த எண்ணம் நிறைவேறாது. நாடும், நாட்டு மக்களும் அமைதியாக வாழும் இந்த நிலை, சிலருக்கு பிடிக்கவில்லை. நாட்டின் பிரதமரே இந்த நோக்கம் கொண்டவராக இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
போதை மருந்து நடமாட்டம்
தமிழ்நாட்டில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பிரதமர் பதவியில் இருந்து அவர் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 11 ஆயிரத்தி 311 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களில்தான் சிக்கியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் பேசுங்கள்
இந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள்? தி.மு.க.வா? இல்லையே! உங்கள் ஆட்சிதானே நடக்கிறது? டபுள் எஞ்சின் என்று சொல்லும், டப்பா எஞ்சின்-தானே அங்கு ஓடுகிறது? இந்தியாவுக்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். இந்த ஸ்டாலின் இல்லை. மகாராஷ்டிரா சென்று பேச வேண்டியதை, மதுராந்தகத்திற்கு வந்து பேசிவிட்டுச் செல்வது நியாயமா?
பெண்கள் பாதுகாப்பு தமிழ்நாட்டில்
அடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வேறு பிரதமர் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். புதுமைப்பெண், விடியல் பயணம், உரிமைத்தொகை, தோழி விடுதி என்று பெண்களுக்காக நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் பெண்களின் சமூகப் பங்களிப்பு தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது! அதிகமான மாணவிகள் கல்லூரிகளுக்குப் படிக்க வருவது தமிழ்நாட்டில்தான்! இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பது தமிழ்நாட்டில்தான். இது எதுவும் தெரியாமல், ஆளுநர் ரவி போன்றே பிரதமர் அவர்களும் பேசுவது மிகமிக கண்டனத்துக்குரியது.
உங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?
ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது உங்கள் குஜராத் அரசுதானே? உலகமே அதிர்ச்சி அடைந்தார்களே. உச்சநீதிமன்றமே அதை இரத்து செய்ததே. நீங்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா? அதுவும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என்று சட்டமன்றத்தில் தடைச்சட்டம் நிறைவேற்றி இருக்கும் இந்த ஸ்டாலின் அரசைப் பற்றி நீங்கள் பேசுவதற்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? அருகதை இருக்கிறதா? குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்று பிரதமர் அவர்கள் பேச நினைத்தால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் சென்றுதான் பேச வேண்டும்! மணிப்பூரில் சென்று கூட பேசுங்கள்!
குஜராத் மோடியா? இந்த லேடியா?
இன்னொரு கூத்து என்ன என்றால், அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் குற்றமே நடக்கவில்லை என்று சொல்லி அ.தி.மு.க. தொண்டர்களையும் பிரதமர் ஏமாற்றப் பார்த்திருக்கிறார். குஜராத் மோடியா? இந்த லேடியா? என்று தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று அம்மையார் ஜெயலலிதா கேட்டார்கள் தெரியுமா? அதெல்லாம் மறந்துவிட்டதா? "இந்தியாவிலேயே அ.தி.மு.க அரசுதான் ஊழல் அதிகம் நடக்கும் அரசு" என்று நீங்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் பேசியதாவது ஞாபகம் இருக்கிறதா? இது அனைத்தையும் நீங்கள் மறந்திருக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். வழக்கம் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சிறப்பாகச் செய்து அனுப்பத்தான் போகிறார்கள்!
கால்களை பார்த்தால் சூரியன் எப்படி தெரியும் பழனிசாமி
மோடி அவர்கள் இந்த மண்ணில் கால் வைத்ததுமே உதயசூரியனே மறைந்துவிட்டதாம். மழை வந்துவிட்டதாம்! சொல்வது யாரு? நம்முடைய பழனிசாமி, பத்துத் தோல்வி பழனிசாமி! வாழ்க்கை முழுவதும் கால்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், சூரியன் எப்படி உங்கள் கண்களுக்குத் தெரியும் பழனிசாமி அவர்களே? ஒருமுறையாவது தலைநிமிர்ந்து பாருங்கள்! அப்போதுதான் சூரியனின் இருப்பும், பவரும் உங்களுக்கு தெரியும்.
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துகொண்டு வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற பெயரைக் கேட்டாலே, ஓடி ஒளியும் கோழைகள் தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வாறு காப்பாற்றுவார்கள்? பா.ஜ.க.வின் ஏவல் படையாகச் செயல்படும் புலனாய்வு அமைப்புகளை வைத்துக் கொண்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம். பணிய வைக்கலாம் என்று நினைத்தால், மக்கள் ஆதரவுடன் அதை எதிர்கொள்ளும் உறுதி தி.மு.க.விற்கு இருக்கிறது! நாங்கள் பணிய மாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம்! மண் மொழி மானம் காத்திடும் எங்கள் ஈராயிரம் ஆண்டுப் போரை தொடர்ந்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

