Asianet News TamilAsianet News Tamil

தொடரும் பாலியல் வன்முறைகள்… கோவை, கரூரை தொடர்ந்து திண்டுக்கல்லில் ஒரு சம்பவம்!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும், அமமுக நிர்வாகியுமான ஜோதி முருகனை கைது செய்யக்கோரி மாணவிகள் போராட்டம் ஈடுபட்டதால் வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

sexual harassed for student in dindigul
Author
Dindigul, First Published Nov 20, 2021, 6:05 PM IST

திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள சுரபி நர்சிங் கல்லூரியில் தாளாளராக இருக்கும் ஜோதி முருகன் என்பவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அமமுக கட்சியின் அம்மா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவரது கல்லூரி விடுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் சுரபி ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன் மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரின் மற்றொரு கல்லூரிக்கு கூட்டி சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா என்ற பெண்ணும் உதவியாக இருந்து வந்துள்ளதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். இந்நிலையில்  நேற்று கல்லூரி விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள் சுமார் 200 பேர் திண்டுக்கல் பழனி இருப்புப்பாதை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sexual harassed for student in dindigul

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் திண்டுக்கல் பழனி சாலையில்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பாலியல் ரீதியாக அத்துமீறிய விவகாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அளித்த நிலையில். கல்லூரி விடுமுறை என்பதால் மாணவிகள் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் வீடுகளுக்கு செல்ல மறுத்த மாணவ மாணவிகள் தங்களின் வருங்காலம் குறித்து கேள்வி எழுப்பிய  நிலையில் கல்லூரி நிர்வாகம் வசூலித்த கல்லூரிக் கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்றும் தற்போது வரை மாணவ மாணவிகள் எந்த நிலையில் படித்துள்ளார்களோ அதே நிலையில் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்து தரவேண்டும், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் உள்ளிட்டை கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

sexual harassed for student in dindigul

இதை அடுத்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார மருத்துவ இயக்குனர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீல் வைக்கப்பட்டன. மேலும் கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios