தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சற்று காலதாமதமாக தொடங்கியது. இருப்பினும் நேற்று முன்தினம் உடுமலைப்பேட்டையில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் அனேக இடங்களில் கனமழை பெய்யும். வடமாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் சில நேரங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று பெய்த மழை அளவு வருமாறு:–

உடுமலைப்பேட்டை, வாடிப்பட்டி தலா 12 செ.மீ., பொள்ளாச்சி 11 செ.மீ., பேச்சிப்பாறை 10 செ.மீ., திருமயம் 8 செ.மீ., திருப்பத்தூர், பீளமேடு தலா 7 செ.மீ., திருப்பூர், செந்துறை, மணியாச்சி, அவினாசி, அரிமளம், காரைக்குடி தலா 6 செ.மீ., நத்தம், சோழவந்தான், சத்திரப்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், பழனி தலா 5 செ.மீ., சூளூர், மருங்காபுரி, அறந்தாங்கி, வால்பாறை, பாபநாசம், புள்ளம்பாடி, தேவகோட்டை, கோவை (தெற்கு பகுதி), மதுரை விமானநிலையம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை தலா 4 செ.மீ.,

ராமேசுவரம், இலுப்பூர், தஞ்சாவூர், மேலூர், லால்குடி, நிலக்கோட்டை, தொண்டி, பெரம்பலூர், திருக்காட்டுப்பள்ளி, காட்டுமன்னார்கோவில், பாடலூர், கொடைக்கானல், கூடலூர் பஜார், சிவகங்கை, திருமானூர், செங்கோட்டை தலா 3 செ.மீ., உசிலம்பட்டி, வலங்கைமான், வேடச்சந்தூர், கோபிசெட்டிப்பாளையம், ஒரத்தநாடு, ஆலங்குடி, தாராபுரம், பாண்டவராயர் தலை, உத்தமபாளையம், அரண்மனைப்புதூர், ஜெயங்கொண்டம், திருவாரூர், பெரியகுளம், சித்தம்பட்டி, சின்னக்கல்லாறு, நாகர்கோவில், செட்டிக்குளம், குடவாசல், மேட்டுப்பட்டி, திருமங்கலம், குந்தாபாலம், ஆடுதுறை, சீர்காழி, கெய்ட்டி, ஆண்டிப்பட்டி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.