இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரத்த நாளத்தில் அடைப்புகள் உள்ளதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பைபாஸ் சர்ஜரி நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.. அதே போல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதுதொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி இருந்தார்.இலாகா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இலாகா மாற்றம் தொடர்பாக மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என்று கூறி முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுத்துள்ளார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுத்துள்ளார். எனினும் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை விட்டுக் கொடுக்காத ஸ்டாலின்: அடுத்த மூவ்!
இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகியவை அவரது உடல்நிலை காரணமாக, நிதி மற்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு மின்சார துறையும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், பிரித்து வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது.